கஞ்சா போதையில் கொலை மிரட்டல் விடுத்த 12 பேர் கைது; சுங்குவார்சத்திரத்தில் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் பகுதியில், கஞ்சா போதையில் பாதசாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தவேலூர், ஈபி காலனி பகுதியில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், மருந்தகங்கள், டீ கடை  உள்பட பல கடைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு வாகனம் ஒன்று வந்தது.

அதில் இருந்து  கத்தி, இரும்பு ராடு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 12 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இறங்கியது. பின்னர், அம்மர்ம கும்பல் வேலை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று கொண்டிருந்த பாதசாரிகளை மடக்கி தகராறில் ஈடுபட்டது. மேலும், அப்பகுதியில் இருந்த கடை உரிமையாளர்களிடம் வாய்த்தகராறில்  ஈடுபட்டு, அவர்களுக்கு  கொலை மிரட்டல் விடுத்தது. இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த அவர்கள், அலறியடித்தவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஒருசில பெண்கள் மற்றும் வியாபாரிகள் கடையில் உள்ளே புகுந்து கொண்டனர்.

பின்னர், அந்த மர்ம கும்பல் தங்கள் வாகனத்தில் ஏறி, அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து, அப்பகுதியினர், சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், கஞ்சா போதையில்  தகராறில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்திவிட்டு, சொகுசு வாகனத்தில் தப்பிச்சென்ற 12 பேர் கொண்ட  மர்ம கும்பலை விரட்டிசென்று,  சுங்குவார்சத்திரம் அருகே மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: