×

கட்டுமாவடி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த 100 கிலோ ராட்சத திருக்கை மீன் ரூ.10 ஆயிரத்திற்கு விலை போனது

அறந்தாங்கி, ஆக. 3: கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த 100 கிலோ எடைகொண்ட ராட்சத திருக்கை மீன் ரூ.10 ஆயிரத்திற்கு விலை போனது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, மந்திரிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் நாட்டுப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலமாகவும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மீன்களை வாங்குவதற்கு திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் வியாபாரிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன்களின் வரத்து அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் ஆடி மாதமாக இருப்பதால் மீன்களின் வரத்தும், விற்பனையும் குறைந்துள்ளது.
வெளியூரிலிருந்து விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய சுமார் 100 கிலோ எடைகொண்ட ராட்சத திருக்கை மீன் கட்டுமாவடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது. திருக்கைகளில் பல வகைகள் உள்ளன. இது புள்ளி திருக்கை என்று அழைக்கப்படுகிறது. அவ்வப்போது இதுபோன்ற ராட்சத வகை மீன்கள் கிடைப்பது வாடிக்கையாகும். ஆனால் இந்த வகையான புள்ளி திருக்கை மிகவும் அரிதாக கிடைக்கும். இந்த திருக்கை மீன் மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திருக்கை மீனை ஐந்து பேர் சேர்ந்து தான் தூக்க முடியும். இந்த திருக்கை மீன் பத்தாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. மீனவர் ஒருவர் கூறும்போது, மற்ற நாட்களில் இந்த திருக்கை மீன் 12,000 ரூபாய்க்கு விலை போகும். ஆனால் ஆடி மாதமாக இருப்பதால் மீன் வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் குறைவாக விலை போனது. சந்தையில் இந்த திருக்கை மீன் ஒரு கிலோ 200 முதல் 250 வரை விற்பனையாகிறது என்றார். இந்த ராட்சத திருக்கை மீனை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதியது.

Tags : Kattumavadi ,
× RELATED கட்டுமாவடி ஊராட்சியில் கலைஞரின்...