2 வருடங்களுக்கு பிறகு நடந்தது கோயில் திருவிழாவில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காட்டுமன்னார்கோவில், ஆக. 2: காட்டுமன்னார்கோவில் அடுத்த உடையார்குடி மாரியம்மன் கோயிலின் ஆடி மாத பிரம்மோற்ஸவம் கடந்த 17ம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக சென்றவாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1 வாரமாக உடையார்குடி, காட்டுமன்னார்கோவில் கடைத்தெரு விழாக்கோலமாக காட்சியளித்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதிகாலை 4 மணியளவில் வடவாற்றங்கரையில் இருந்து நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தும் விதமாக பால்குடம், அலகு ஏற்றியும், செடலிட்டும் பக்தர்கள் ஆற்றிலிருந்து சுமார் 2 கி.மீ தூரம் வலம் வந்து மாரியம்மனுக்கு மாவிளக்கு இட்டு வழிபட்டனர்.

 பெண்கள் கோயில் வளாகத்தில் அங்கப்ரதட்சணம் செய்தும் அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். மாலை 4 மணியளவில் வடவாற்றில் இருந்து புறப்பட்ட சக்தி கரகம் 2 ஆயிரம் பக்தர்களின் புடை சூழ கச்சேரித் தெரு, புதுமேல வீதி, மேலவீதி, வடக்கு வீதி, டானாக்காரத் தெரு மற்றும் ரெட்டியார் ரோடு வழியாக உடையார்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்து அங்கு ஏற்பாடு செய்திருந்த தீக்குண்டத்தில் சுமார் 5.10 மணியளவில் இறங்கி கோயிலுக்குள் சென்றது. பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் பூக்குழியை மிதித்து சென்று அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தீமிதி உற்ச்சவத்திற்கு சேத்தியாத்தோப்பு சரக காவல் துணை கண்காணிப்பாளர் ரூபன் குமார் தலைமையில் காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஏழுமலை மேற்பார்வையில் சுமார் 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories: