×

கந்தர்வகோட்டை பகுதியில் மரவள்ளி கிழங்கு குச்சி பதியம் செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம்

கந்தர்வகோட்டை,ஆக.2: கந்தர்வகோட்டை பகுதியில் மரவள்ளி கிழங்கு குச்சி பதியம் செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்குகளை வெட்டி மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்தனர். தற்போது மீண்டும் நிலங்களை நன்கு இயந்திரங்களை கொண்டு ஆழ உழவு செய்தனர். நீர்பாய்ச்சி நிலத்தை சமன் செய்து சொட்டு நீர் பாசனத்திற்கு உரிய குழாய்களை முறையாக அமைத்துள்ளனர்.
அதில் 3 அடி பாத்தி அமைத்து மரவள்ளிக்கிழங்கு குச்சி நடவு செய்ய தொடங்கியுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, மூன்று அடி பாத்தி அமைத்து இரண்டடிக்கு ஒரு குச்சி என பதியம் செய்தால் நிலத்திற்கு களை வெட்டவும், மருந்து வைக்கவும் சுலபமாக இருக்கும். மரவள்ளிகிழங்கு விழுது இறங்கும் போது பருமனாகவும், நீளமாகவும் அதிக தூர்கட்டி இருக்கும்.
இதனால் நல்ல முறையில் விவசாயத்தில் லாபம் கிடைக்கக்கூடிய மகசூல் பெற முடியும். கிழங்கு விவசாயதை பொருத்தவரை 10 மாதங்களில் இருந்து 12 மாதங்களுக்குள் விளைச்சலை எடுத்து விட வேண்டும். அப்போதுதான் மொத்த வியாபாரிகள் எதிர்பார்க்கும் அளவில் கிழங்கு கிடைக்கும் என்றனர்.

Tags : Gandharvakottai ,
× RELATED ஆதனக்கோட்டை பகுதியில் கொத்து கொத்தாக காய்க்க துவங்கிய மாங்காய்