பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக.2: கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கந்தசாமி, சுப்பிரமணி, சரஸ்வதி, சின்னசாமி உள்பட ஏராளமானோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நாட்ராயன், மாவட்ட தலைவர் பாலன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். குடும்பத்திற்கு 100 நாள் என்பதை வேலை கேட்கும் அனைவருக்கும் என திருத்தம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். சிறு, குறு விவசாயத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் 5 சென்ட் வீட்டுமனை நிலம் வழங்கி, வீடுகட்ட ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: