திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் வடிகாலுக்கு சிலாப் அமைக்க கோரிக்கை

கரூர், ஆக.2: கரூர் மாநகராட்சி ராமச்சந்திரபுரம், வஉசி தெரு வடக்கு பகுதியில் ஓடும் கழிவுநீர் வடிகால் மீது சிமென்ட் சிலாப் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், தாந்தோணிமலை வஉசி தெரு வடக்கு மற்றும் ராமச்சந்திரபுரம் பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமச்சந்திரபுரம், வஉசி தெரு வடக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து தனியார் பஸ்பாடி நிறுவனம் வரை கழிவு நீர் செல்லும் வாய்க்கால் கட்டப்பட்டு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.

இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திறந்த நிலையில் உள்ள வடிகால் வழியாக செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது விழுந்து விபத்துக்கு உள்ளாகும் நிகழ்வு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் அச்சமின்றி இந்த பகுதியை கடந்து செல்லும் வகையில் திறந்த நிலையில் உள்ள வடிகால் மீது கான்கிரீட் சிலாப் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: