பண்ருட்டி பகுதியில் பரபரப்பு: கல்லூரிக்கு சென்ற 3 மாணவிகள் மாயம்

பண்ருட்டி, ஜூலை 30:  பண்ருட்டி பகுதியில் கல்லூரிக்கு சென்ற 3 மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பண்ருட்டி அருகே மந்திபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் காவியா (20). இவர் விழுப்புரம் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோன்று அங்குசெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகள் டென்சிகா (20). இவர் கடலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பு மகள் தேவிகா (19). இவர் கடலூர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் கடந்த 27ம்தேதி கல்லூரிக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர்கள், அதன்பின்னர் வீடு திரும்பி வரவில்லை. இதனைக் கண்டு அதிர்ந்து போன அவர்களது பெற்றோர்கள் அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக காவியாவின் தாய் குப்பம்மாள், டென்சிகாவின் தாய் நளினி, தேவிகாவின் தந்தை சுப்பு ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: