இரும்பு கம்பியால் இளம்பெண், வாலிபரை சரமாரி தாக்கிய மனநிலை பாதித்தவர் கைது

நெல்லிக்குப்பம், ஜூலை 30: நெல்லிக்குப்பம் திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் மகன் இளவரசன் (30), வேன் ஓட்டுநர். இவரது மனைவி சவுமியா(25). இளவரசன் நேற்று மதியம் உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளி வாகனம் ஓட்ட சென்று விட்டார். வீட்டில் இளவரசனின் பெற்றோரும் வேலைக்காக வெளியில் சென்றுள்ளனர். வேன் ஓட்டுனரான இளவரசனின் அண்ணன் சிலம்பரசன் (33). சிலம்பரசனுக்கு திருமணம் ஆனநிலையில் தினமும் குடித்து விட்டு வந்த தனது பிரச்னை செய்து வந்ததால் அவர் பிரிந்து சென்று விட்டார்.

பெற்றோருடன் வசித்து வந்த சிலம்பரசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிலம்பரசன் அவ்வப்போது, பெற்றோர் மற்றும் தம்பியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். மேலும் தெருக்களில் உள்ளவர்களிடமும் அடிக்கடி சண்டை போட்டு அவர்களை தாக்குவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் இளவரசன் சாப்பிட்டு விட்டு வேன் ஓட்ட சென்றவுடன் சவுமியா தனியாக இருந்துள்ளார்.

அப்போது அவர் கோயிலுக்கு செல்ல இருப்பதால், குளிக்கப் போகிறேன். நீங்கள் உள்ளே சென்று டிவி பார்க்குமாறு சிலம்பரசனிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் நான் உள்ளே எல்லாம் செல்ல முடியாது என கூறியுள்ளார். இதில் சவுமியாவுக்கும், சிலம்பரசனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் வீட்டிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து சவுமியாவின் தலையில் சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சவுமியா ரத்தவெள்ளத்தில் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சாலையில் மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த நெல்லிக்குப்பம் போலீசார் சவுமியாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலம்பரசனை பிடிக்க முயன்ற போது காவல்துறையினருடன் சென்ற அப்பகுதியை சேர்ந்த யாஷித் என்ற இளைஞரையும் இரும்பு கம்பியால் தாக்கினார். போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.  

Related Stories: