சின்ன வீராம்பட்டினம் கடலில் குளித்தபோது சுழல் அலையில் சிக்கி 2 மாணவர்கள் மாயம்

தவளக்குப்பம், ஜூலை 30: புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அருகே உள்ள மங்களம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ஐயனார்(17), நெடுஞ்செழியன் மகன் அஷ்வின்(17), மேலும் அதே பகுதியை சேர்ந்த சபரிநாதன்(17) மற்றும் ஹரீஷ் (17) ஆகிய நான்கு பேரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் நால்வரும் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு இருசக்கர் வாகனத்தில் நால்வரும் மதியம் 12 மணியளவில் சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்துள்ளனர்.

அங்கு அவர்கள் நால்வரும் தண்ணீரில் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இதில் ஐயனார் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். சபரிநாதன் மற்றும் ஹரீஷ் ஆகியோர் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது ஐயனார் மற்றும் அஷ்வின் ஆகியோர் கடல் முகத்துவாரம் அருகே குளித்துக்கொண்டிருந்தபோது கடல் அலையில் சுழல் ஏற்பட்டதாலும், வழக்கத்தை விட கடல் அலைகள் அதிகமாக காணப்பட்டதாலும்

2 மாணவர்களும் கண் இமைக்கும் நேரத்தில் சுழல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

இதனை கண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டவுடன் அங்கு இருந்த மீனவர்கள் மற்றும் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களை மீட்க முடியவில்லை. மேலும் மாணவர்களின் உறவினர்கள் அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் படகுகளில் சென்று மாயமான மாணவர்களை தேடி வருகின்றனர்.

10 மணி நேரத்திற்கும் மேலாக தேடியும் மாணவர்கள் கிடைக்காததால் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகாநந்தம் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: