அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது; திருவள்ளூர் ரயில் நிலையம் - தேரடி வரை அரசு பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தல்: கல்லாக்கட்டும் தனியார் பேருந்துகள்

திருவள்ளூர், ஜூலை 30: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து தேரடி செல்லும் டி1 அரசு பேருந்து அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதால்  தனியார் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் கல்லாகட்டுவதுடன் அடாவடியில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி,  வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. அரசுபள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஏகாட்டூர், கடம்பத்தூர், மணவூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து  செல்கின்றனர். அவர்களுள் அரசு பேருந்தை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தனர். நாள்தோறும் புறநகர் மின்சாரரயில், விரைவு ரயில் என 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த டி 1 என்ற பேருந்து, ஜெ.என்.சாலை வழியாக வீரராகவ பெருமாள் கோயில் உள்ள திருவள்ளூர் தேரடி வரை செல்லும். இதனால் இந்த பேருந்து தேரடி- ரயிலடி பேருந்து என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இதனால் மருத்துவமனை, நகராட்சி அலுவலகத்திற்கு செல்லபவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லக்கூடியவர்கள் இந்த ட்டி 1 என்ற அரசு பேருந்தை பயன்படுத்தி வந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டி 1 என்ற எண்ணில் 5 பேருந்துகள் இயங்கிவந்தன. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியகுப்பம், மணவாளநகர் போன்ற பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள்  திருவள்ளூர் ரயில் நிலையம் அருகிலிருந்து புறப்படும் டி 1 என்ற அரசுப்பேருந்தில் பயணித்து பள்ளிக்கு செல்வதுண்டு. அரசு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பேருந்து அட்டை மூலம் பயணித்து வந்தனர்.  

திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை வரும் பேருந்தில் செல்லும் மாணவ மாணவிகள் அங்கிருந்து சுலபமாக பள்ளிக்கு சென்று வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை செல்லும் ட்டி1 என்ற அரசுப் பேருந்து இயக்கவில்லை என கூறப்படுகிறது.   அதனால் ஆட்டோக்களின் வரத்து அதிகமானது. இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் ரயில் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திலேயே உள்ளது.  ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு பொது மக்கள், வயதானவர்கள் நடந்துவர முடியாமல் இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கி பயணிகளை ரயில் நிலைய நுழைவு வாயிலிலேயே ஏற்றிச்செல்கின்றனர்.  

இதில் ரயில்வே ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தில் இல்லாத ஆட்டோ ஓட்டுனர்கள் முக்கிய சாலையில் நிறுத்திவைத்து அங்கிருந்து பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படுகிறது. இதனால் சென்னைக்கோ பிற ஊர்களுக்கோ அவசரமாக ரயிலைப் பிடிக்கக்செல்ல கூடியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து புறப்படும் வெளியூர் பேருந்துகள் அவ்வப்போது திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கும் இயக்கப்படுவதாக தெரிவித்தனர். இவ்வாறு வரும்  பேருந்துகளும், வெளியூருக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பேருந்து நிறுத்தும் இடத்திலிருந்து நகரின் முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் ஆபத்தான நிலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள்  தேரடி- ரயிலடிக்கு செல்லும் பேருந்துகள்  காலை முதல் இரவு வரை இயங்கி வருகிறது.  இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே மீண்டும் டி 1 என்ற அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கினால் ஆயிரக் கணக்கான பயணிகள் நாள்தோறும் பயன்படுத்தும்போது அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுகுறித்து திருவள்ளூர் நகர்மன்ற 11-வது வார்டு உறுப்பினர் வி.இ.ஜான் போக்குவரத்து அதிகாரிகளிடமும் டி1 என்ற அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கி அரசுக்கு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.  நகர் மன்றக் கூட்டத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.  எனவே டி 1 என்ற அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்றும், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஆட்டோக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்து, எளிதில் சென்றுவரக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனியார் பேருந்துகள் இயக்கத்தை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதே  மக்கள் மற்றும்  மாணவ மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்களின் அடாவடி வசூல்  

திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை செல்ல 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகிறது.  அதிலும் குறிப்பாக ரயில்வே ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் என்ற பெயரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ரயில் நிலைய நுழைவு வாயிலிலே நிறுத்தி, ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளை அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்றிச் செல்கின்றனர்.ஒரு நபருக்கு ₹20  கட்டணம் வசூலிக்கின்றனர். திருவள்ளூர் தேரடி வரை செல்லாமல் வேறு எங்காவது செல்லவேண்டுமானாலும் ₹100 அதிகமாக வசூல் செய்து அடாவடியில் ஈடுபடுகின்றனர்.

Related Stories: