கனரக வாகனங்கள் செல்வதால் சேதமடைந்த திருப்போரூர் - நெம்மேலி சாலை: சீரமைக்க வலியுறுத்தல்

திருப்போரூர், ஜூலை 30: திருப்போரூர் - நெம்மேலி சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை சேதமடைந்தது. அதனை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூர் மற்றும் நெம்மேலி இடையே சுமார் 3 கி.மீ. தூர சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே செல்லும் பக்கிங்காம் கால்வாயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலையை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், திருவிடந்தை, தெற்குப்பட்டு, வடநெம்மேலி, புதிய கல்பாக்கம், கிருஷ்ணன்காரணை, நெம்மேலி, பட்டிபுலம், சாலவான்குப்பம் ஆகிய கிராம மக்கள் திருப்போரூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம், மின் வாரிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல மிகவும் உபயோகமானதாக இந்த சாலை உள்ளது. நெம்மேலியில் உள்ள தமிழக அரசு கலை - அறிவியல் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, ஓ.எம்.ஆர். சாலையின் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இந்த பணிக்காக, பெரியபெரிய லாரிகளில் ஏரி மண் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு ராட்சத லாரிகள் செல்வதால் சிறிய அளவிலான இந்த சாலையானது பாரம் தாங்காமல் பல இடங்களில் சேதமடைந்து விட்டது. இதனால், சாலையின் ஓரங்களில் பெரிய  பள்ளங்கள் உருவாகி உள்ளன. மிகக்குறுகிய சாலையாக இருப்பதாலும், சாலையின் இரு பக்கங்களிலும் விவசாய நிலங்கள் மற்றும் கிணறு போன்றவை இருப்பதாலும் எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்க முடியாத நிலை உள்ளது.

தற்போது, மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருவதால் பாதுகாப்புக்காக வந்துள்ள பல்வேறு மாவட்ட போலீசாரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலை சேதமடைந்துள்ளதால் அவசர ேநாக்கத்தில் செல்வோர் பயணிக்க முடியாத நிலை உள்ளது. ஆகவே, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை செஸ் ஒலிம்பியாட்டின் தேவையை கருத்தில் கொண்டு திருப்போரூர் - நெம்மேலி சாலையை சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: