திருக்கழுக்குன்றத்தில் மருத்துவர், செவிலியர் இல்லாத அரசு மருத்துவமனை : நோயாளிகள் கடும் அவதி

திருக்கழுக்குன்றம், ஜூலை 30: திருக்கழுக்குனறம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் மிகவும்  அவதிப்பட்டு வருகின்றனர். திருக்கழுக்குன்றம் சன்னதி தெருவில், ஒரு தாலுகா  அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.   இந்த மருத்துவமனைக்கு திருக்கழுக்குன்றம் தாலுகா அளவில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மருத்துவ தேவைக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அரசு மருத்துவமனையையே தேடி, நாடி வருகின்றனர். ஆனால், இந்த மருத்துவமனையில் நோயாளிகளின் வருகைக்கேற்ப போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததாலும் இருக்கின்ற மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராமல் தாமதமாக வருவதாலும் கிராமங்களிலிருந்து வருகின்ற நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்ல வேண்டியுள்ளது.

மேலும் மருந்து, மாத்திரை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதால்  நோயாளிகள் மேலும் காத்திருக்கின்றனர். மருத்துவமனைக்கென்று இட வசதி இருந்தும், போதிய கட்டிட வசதி இல்ைல. எனவே, அதிகளவு வருகின்ற புறநோயாளிகள் மழையிலும், வெயிலிலும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நோயாளிகளின் வருகைக்கேற்ப போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும், கட்டிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் சுகாதார துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,  ‘தாலுகாவிற்கென்று பெரிய மருத்துவமனை என்றால் இந்த திருக்கழுக்குன்றம் அரசு  தாலுகா மருத்துவமனை தான் ஒன்றுள்ளது. இங்கு வந்தால் போதிய மருத்துவர்கள் இல்லாததால், நாங்கள் நீண்ட நேரம் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது.  சில நேரங்களில் செவிலியர்களே சிகிச்சையளிக்கின்றனர்.

அதிலும் செவிலியர்களும், ஊழியர்களும் நோயாளிகளான எங்களை அலட்சியப்படுத்துகின்றனர். சில மருத்துவர்கள் காலையில் தாமதமாக வந்து  மதியம் சீக்கிரமே சென்று விடுகின்றனர். இரவு நேரங்களில் பெரும்பாலும் மருத்துவர்கள் இல்லாததால் விபத்து மற்றும் முக்கிய பிரச்னைக்கு வரும் நோயாளிகள் இங்கிருந்து 18 கிலோ மீட்டர் தூரமுள்ள  செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியுள்ளது. அதுவும் சில நேரங்களில் இங்கிருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கைளை நியமிக்க வேண்டும். மேலும், இருக்கின்ற மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: