திருப்போரூரில் ஒரே ஊருக்கு 2 பெயர் பலகை அரசு பணத்தை வீணடிக்கும் நெடுஞ்சாலைத்துறை

திருப்போரூர், ஜூலை 30: திருப்போரூரில் ஒரே ஊருக்கு இரண்டு பெயர் பலகையை வைத்து, அரசு பணத்தை நெடுஞ்சாலை துறை மக்களின் வரிப்படத்தை வீணடித்துள்ளது. திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில், ஓஎம்ஆர் சாலையில் பையனூர் கிராமம் உள்ளது. இக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் மருத்துவமனை, பல்கலைக்கழகம், தனியார் தொழிற்சாலை  என வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஓஎம்ஆர் சாலையை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. ஒவ்வொரு ஊரின் தொடக்கத்திலும் அந்த ஊரின் பெயரை அறிந்து கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பெயர் பலகைகள் வைக்கப்படுகின்றன.

இது வாகனங்களில் பயணம் செய்வோருக்கு இந்த பெயர் பலகைகள் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. இவற்றின் முக்கியத்துவம் அறியாமல் பலரும் இவற்றின் மீது போஸ்டர்களை ஒட்டி சேதப்படுத்துகின்றனர். இதனிடையே, நெடுஞ்சாலைத்துறையும் தன் பங்கிற்கு வீண் செலவு செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் செல்லும்போது, பையனூர் கிராமத்தின் தொடக்கத்தில் ஊரின் பெயரை குறிக்கும் வகையில் ஏற்கெனவே ஒரு பெயர் பலகை இருந்தது.

தற்போது, 5 அடி தூரத்தில் அதே போன்றதொரு மற்றொரு பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. பழைய பெயர் பலகை எந்த சேதமும் அடையாமல் நல்ல நிலையில் இருக்கும்போது, புதிய பெயர் பலகை வைத்து மக்களின் வரி பணத்தை வீண் செலவு செய்வதை விட, பெயர் பலகை இல்லாத ஊர்களுக்கு இந்த நிதியை பயன்படுத்தலாம் என்று சமூக ஆர்வலர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: