டாஸ்மாக் விற்பனையாளர்கள் உதவியுடன் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை கனஜோர்: கண்டு கொள்ளாத போலீசார்

செய்யூர், ஜூலை 30: பவுஞ்சூர் பகுதியில்  இயங்கும் அரசு மதுபான கடை அருகிலேயே கள்ளத்தனமாக மர்ம நபர்கள் மதுபானங்களை வாங்கி விற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியத்தில் பவுஞ்சூர் கிராமம் உள்ளது. இப்பகுதியில், அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடை அணைக்கட்டு காவல் நிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த மதுபான கடை திறப்பதற்கு முன்பே, சில மர்ம நபர்கள் மதுபான கடை அருகில் உள்ள கட்டடத்தில் அமர்ந்து அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வருவதாக அப்பகுதி மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலையோரம் உள்ள அந்த மதுபான கடையை, அங்கிருந்து மாற்ற வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், அதற்கான சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இப்பகுதியிலிருந்து இந்த கடையை வேறொரு பகுதிக்கு மாற்ற கோரி பல வருடங்களாக போராடி வருகிறோம்.  ஆனால், அதற்கான நடவடிக்கை இது வரை எடுக்கப்படவில்லை.  மதுபான கடையில் பணியாற்றும் பணியாளர்களே குறைந்த மதிப்பு மிக்க மதுபானங்களை வெளி நபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.  

மேலும், மதுபானங்கள் விற்பதற்கான இடத்தை மதுபான கடை எதிரிலேயே உள்ள ஒரு பகுதியை அவர்களே, ஒதுக்கி உள்ளனர். குறைந்த விலைக்கு பெட்டி பெட்டியாக வாங்கும் அந்த மர்ம நபர்கள் காலை 6 மணி முதலே  மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க துவங்கி விடுகின்றனர். இதோபோல், இந்த கடைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பகுதி வீட்டில் டாஸ்மாக் கள்ளச் சந்தையில் விற்பனை நடந்து வருகிறது. இதனால், குடிமகன்கள் காலையிலேயே மதுபான கடை முன் கூடி விடுவது வழக்கம்.

விலை அதிகமாக விற்கப்பட்டும் அதை வாங்கி குடிக்க குடிமகன்கள் தயாராக இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. மேலும், இது பொதுமக்கள் இடையே முகசுலிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற செயல்களுக்கு அணைக்கட்டு காவல் துறையினரும் உடந்தையாக இருப்பதும் வருத்தத்தை அளிக்கிறது. எனவே, நெடுஞ்சாலையொரம் அமைந்துள்ள இந்த அரசு மதுபான கடையை வேறொரு பகுதிக்கு மாற்ற  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

வருவாய் பாதிப்பு

பவுஞ்சூர் டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்  மதுபான பாட்டீலின் விலை ₹ 140 விற்பனை செய்யவேண்டும். ஆனால், கள்ளச்சந்தையில் விற்பவர்களுக்கு ₹ 160க்கு விற்பனையாளர் விற்கின்றனார். அதனை வாங்கி சென்று கள்ள சந்தையில் விற்பவர்கள் ₹ 200க்கு மது பிரியர்களுக்கு விற்கின்றனர். இதில், கடை விற்பனையாளருக்கு ₹ 20 ரூபாய் லாபம் கிடைக்கிறது. கள்ளச்சந்தையில் விற்பவர்களுக்கு ₹ 40 வருமானம் கிடைக்கிறது. இதில், அரசுக்கு கிடைக்கவேண்டிய வருமானம் விற்பனையாளர், கள்ளச்சந்தையில் விற்பவர்களுக்கு சென்று விடுகிறது. இதனை போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால், கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை ஆறாக ஓடுகிறது.

Related Stories: