×

திருச்சி கே.கே நகரில் மாலைநேர உழவர் சந்தையில் விற்பனை துவங்கியது

திருச்சி, ஜூலை 29: திருச்சி கே.கே. நகரில் மாலை நேர உழவர் சந்தையில் விற்பனை துவங்கியது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக பயன் பெறுவதற்காக உழவர் சந்தை என்ற பொன்னான திட்டம் மறைந்த முதல்வர் கருணாநிதியால் துவங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் அண்ணாநகர், கே.கே.நகர், முசிறி, துறையூர், திருவெறும்பூர், லால்குடி மற்றும் மணப்பாறை என 7 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் சரக்கு கட்டணம் ஏதுமின்றி உழவர் சந்தைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மூலம் தங்களது விளைநிலங்களில் இருந்து விளைபொருட்களை இடை தரகர்கள் இன்றி, சில்லரை விலையை விட 15 சதவீதம் குறைவாகவும், மொத்த விலையை விட 20 சதவீதம் அதிகமாகவும் விற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்கும் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையின்போது அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கே.கே நகர் உழவர் சந்தையில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி செயல்படும் என அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் கே.கே.நகரில் மாலை நேர உழவர் சந்தையை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் சரவணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்கள், உழவர் உற்பத்தியாளர், நிறுவன உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Sale ,Evening Farmers Market ,Trichy KK Nagar ,
× RELATED ₹3.63 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்