என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பயிற்சி பொறியாளர் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட தேர்வு ஆகாதது ஏன்?

நெய்வேலி, ஜூலை 29: பயிற்சி பொறியாளர் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட தேர்வு ஆகாதது ஏன் என நெய்வேலியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பயிற்சி பொறியாளருக்கு தேர்வு நடத்தி 299 பேர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசால் நடைபெறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளில் கூட தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் தேர்வு பெற்று வரும் போது என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்திய தேர்வில் ஒருவர் கூட தேர்வு ஆகாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் என்எல்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது என்று தெரிகிறது. குறிப்பாக என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு வட இந்தியர்களை கொண்டு வர மேற்கொள்ளும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.  

 ஏற்கனவே 299 பொறியாளர்கள் நியமனம் குறித்து அனைத்து தொழிற் சங்கத்தினர் வழக்கு கொடுத்துள்ள நிலையில் தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் விரைவில் பயிற்சி பொறியாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ ஆய்வுக்கு வர சொல்லி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே என்எல்சி நிறுவனத்திற்கு  வீடு, நிலம் கொடுத்து வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வேலை வழங்காமல் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள், நெய்வேலி என்எல்சி சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: