கருப்பசாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா

சேத்தியாத்தோப்பு, ஜூலை 29: சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு விநாயகபுரத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோயிலில் 22ம் ஆண்டு ஆடி அமாவாசை பெருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. கடந்த 22ம் தேதி மாலை மங்கள இசையுடன் கோயிலில் கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து அங்காளபரமேஸ்வரி பிறப்பு, வளர்ப்பு, பம்பை உடுக்கை இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு வெள்ளாற்றங்கரையிலிருந்து மேளதாளத்துடன் அங்காளபரமேஸ்வரி வீதியுலாவும், பெரியாண்டவர், பெரியநாயகி என்கிற அங்காளபரமேஸ்வரி திருக்கல்யாண வைபோகமும் நடைபெற்றது. குறுக்கு ரோடு விநாயகபுரம் பகுதி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதை தொடர்ந்து நேற்று உலக மக்கள் நலம்பெற வேண்டி எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகிலிருந்து ஊர்வலமாக அருள்வாக்கு சித்தர் டாக்டர் ஆறுமுகசுவாமிகள் மற்றும் இளம் சித்தர் பாலகிருஷ்ணன் தலைமையில் பக்தர்கள் புடைசூழ 5001 பால்குடம் எடுத்து சென்று கருப்பசாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் கருப்பசாமிக்கு ஆடு, கோழி பலிகொடுக்கும் பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை, கருப்பசாமி குடும்பத்தினர் நடத்தும் கலை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, கூட்டு பிரார்த்தனை, அன்னதானமும், வரும் 3ம் தேதி கருப்பசாமிக்கு மறுபலி பூஜையும் நடைபெற உள்ளது.

Related Stories: