தகராறை விலக்கி விட சென்றவர் கல்லால் அடித்து கொலை: இரட்டையருக்கு ஆயுள் தண்டனை

சிதம்பரம், ஜூலை 28: தகராறை விலக்கி விட சென்றவர் கல்லால் அடித்து கொன்ற இரட்டையருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட் உத்தரவிட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன்கள் தண்டபாணி (55) மற்றும் ராமச்சந்திரன்(55). இரட்டையர்களான இவர்கள் இருவரும் கடந்த 2018ம் ஆண்டு கிராமத்தில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யாறு என்பவர் ஏன் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் எனக்கூறி இருவரையும் விலக்கி விட்டுள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து செங்கல்லால் அய்யாறுவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அய்யாறு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தண்டபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிதம்பரத்தில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல், சண்டையை விலக்கி விட சென்றவரை கல்லால் அடித்து கொலை செய்த இரட்டையர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: