சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு பரனூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்

விழுப்புரம், ஜூலை 28: சிறப்பு டிஜிபி மீதானபாலியல் வழக்கில் சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அப்போதைய தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சாட்சிகள் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நேற்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எஸ்பி கண்ணன் மட்டும் நேரில் ஆஜரானார். தொடர்ந்து, சாட்சிகள் விசாரணை துவங்கியது. திருத்தனி இன்ஸ்பெக்டர் சுரேஷ், சத்திரம் போலீஸ் மணிகண்டன், பெரம்பலூர் ரங்கநாயகி ஆகியோர் சாட்சியம் அளித்தனர். தொடர்ந்து பரனூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் 3 பேரும் சாட்சியம் அளித்தனர். தொடர்ந்து அவர்களிடம் எதிர்தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் 22வது சாட்சி அப்போதைய ஐஜி ஜெயராம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: