அரசு ஒப்பந்த பணிகளை கேட்டு அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதம் சீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த பொறியாளர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம், ஜூலை 27: அரசு ஒப்பந்த பணிகளை தங்களுக்கு வழங்கக் கோரி அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ சக்கரபாணி, திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜசனன் ஆகியோர் தலைமையில், ஒன்றிய செயலாளர் ராமதாஸ், நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நேற்று ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவகலத்துக்கு வந்தனர். அங்கு, திட்ட இயக்குநர் இல்லாததால், பொறியியல் பிரிவுக்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை சூழ்ந்து முற்றுகையிட்டவாறு அமர்ந்தனர். தொடர்ந்து, அங்கிருந்த உதவி பொறியாளர் ஒருவரிடம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பல்வேறு பணிகள் ஒப்பந்தம் விடப்படுகிறது. அதில், அதிமுகவினருக்கு எதற்காக பணிகள் வழங்க மறுக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றிருப்பதாக கூறியதை ஏற்க மறுத்த அதிமுகவினர், திட்டமிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டார்களா என்று கூறி பலரும் கோஷமிட்டதால், உதவி பொறியாளர் அந்த சீட்டிலிருந்து வெளியே ஓட்டம் பிடித்தார். பின்னர் ஒருமணி நேரத்துக்கு மேலாக, பொறியியல் பிரிவு அறையை ஆக்கிரமித்துக்கொண்டு அமர்ந்திருந்ததால் அங்கு பணிகளும் பாதிக்கப்பட்டன. பின்னர், வேறு சில அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை தொடர்பாக மனு அளிக்குமாறு கூறினர். இதனை தொடர்ந்து அவர்கள் மனு அளித்துவிட்டு சென்றனர். இதுகுறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒளிவுமறைவின்றி பணிகள் ஒப்பந்தம் விடப்பட்டு நேர்மையான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் அரசு ஒப்பந்த பணி கேட்டு அதிகாரியை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: