கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே ₹ 35 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். கேளம்பாக்கத்தை அடுத்துள்ள தையூர் ஊராட்சியில்  ஓஎம்ஆர் சாலையில் செங்கண்மாலீஸ்வரர் கோயில் உள்ளது. தையூர் கிராமத்தில்  இந்த கோயிலுக்கு சொந்தமான புல எண் 1384ல் பரப்பளவு 11 ஏக்கர் 74 சென்ட்  நிலம் உள்ளது. இவற்றில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான ஏழை மக்கள்  வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகள் போக மீதி இருந்த  பரப்பளவு 6 ஏக்கர் 74 சென்ட் நிலமம் கோயிலின் கட்டுப்பாட்டிலும்,  பராமரிப்பிலும் உள்ளது.

 

இந்நிலையில், இந்த நிலத்தின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமித்து சாலை அமைப்பதாகவும், விளையாட்டு மைதானம் அமைப்பதாகவும் புகார்  எழுந்தது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை  ஆணையர் வான்மதி உத்தரவின்பேரில் செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத்துறை  உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செங்கண்மாலீஸ்வரர் கோயில் செயல்  அலுவலர் ஜி.சரவணன் மற்றும் கோயில் ஊழியர்கள் நேற்று அப்பகுதிக்கு சென்று  பார்வையிட்டனர்.  கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சுமார் 3000  சதுர அடி பரப்பிலான சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். மேலும்,  விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக சுமார் 5 ஏக்கர் நிலத்தில் இருந்த  சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இந்த  இடத்தையும் கைப்பற்றி சுவாதீனப் படுத்திய அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான  இடம் என்று எச்சரிக்கைப் பலகையையும் வைத்தனர்.

 

மேலும், இந்த ஆக்கிரமிப்பு  குறித்து செயல் அலுவலர் சரவணன் கேளம்பாக்கம் போலீசில் புகார்  அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுவாதீனப் படுத்தப்பட்ட நிலத்தின் தற்போதைய  சந்தை மதிப்பு ₹35 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: