×

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 91.06% தேர்ச்சி

திருவள்ளூர்: நடந்து முடிந்த 2021-22 கல்வி ஆண்டில் பிளஸ் 1 தேர்வில் 91.06 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 2021-22 கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் பொன்னேரி,  திருவள்ளூர்,  அம்பத்தூர், ஆவடி,  திருத்தணி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில்  மொத்தமுள்ள 372 பள்ளிகளை உள்ளடக்கிய 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 52 மாணவர்களும்,  21 ஆயிரத்து 904 மாணவிகளும் என மொத்தம் 42 ஆயிரத்து 956  பேர் தேர்வு எழுதினர்.

இதில் 18 ஆயிரத்து 197 மாணவர்களும்,  20 ஆயிரத்து 919 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 116 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 86.44 சதவிகித மாணவர்களும், 95.50 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி பெற்றதால் 91.06 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 110 அரசு பள்ளிகளில் பயின்ற 17 ஆயிரத்து 365 மாணாக்கர்களில் 14 ஆயிரத்து 128 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றதால் தேர்ச்சி சதவிகிதம் 81.36 சதவிகிதமாக உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tiruvallur ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு