வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை

செங்கல்பட்டு: வாடகை கார் டிரைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சடலத்தை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதியில் அர்ஜுன் என்பவரது  காரை வாடகைக்கு பேசிய ஒரு மர்மகும்பல் காரில் சென்னை முழுவதும் சுற்றித்திரிந்தது. இதனையடுத்து, நேற்று முன்தினம் செங்கல்பட்டு வல்லம் பகுதியில் கார் டிரைவர் அர்ஜுனனின் கழுத்தை அறுத்து காரில் இருந்து சாலையில் தூக்கிவீசிவிட்டு தப்பியோடி விட்டது. உயிருக்கு போராடிய அவரை 108  ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில்,  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அர்ஜுனனை கொலை செய்த மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இவரின்  மனைவி ஜோதிகா (20),  இரண்டு மாத பெண்குழந்தையை கருத்தில் கொண்டு அவர் மனைவிக்கு ஓலா நிறுவனம் சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, இரண்டாவது நாளாக  உறவினர்கள் மற்றும் ஓலா டாக்சி நிறுவனங்களின் பனியாளர்கள்  300க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, காவல் துறையினருடன்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நேற்று மாலை  சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களை  காவல்துறை தடுத்து நிறுத்தினர். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: