குடிபோதையில் பெட்ரோல் பங்க்கை சூறையாடிய ஆசாமிகள்

விழுப்புரம், ஜூன் 25: விழுப்புரம்  அருகே மது போதையில் தகராறு செய்த ஆசாமிகள் பெட்ரோல் பங்க்கை சூறையாடிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியில் பெட்ரோல் பங்க்  செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம்  நள்ளிரவு கண்டம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் 2 பைக்குகளில் பெட்ரோல் நிரப்ப வந்தனர். அப்போது, பெட்ரோல் நிரப்பிய  பிறகும் நீண்ட நேரமாக வாகனத்தை எடுக்காததால், அந்த இளைஞர்களை வாகனத்தை  நகர்த்துமாறு பெட்ரோல் நிலைய மேலாளர் கார்த்தி கூறியுள்ளார். இதனால்,  ஆத்திரம் அடைந்த மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள், மேலாளர் கார்த்தியை சரமாரியாக தாக்கினர். அப்போது டீசல் நிரப்ப வந்த லாரி  ஓட்டுனர்கள் ஹரிராமன், இளஞ்செழியன் ஆகியோரை தடுக்க முயன்றனர்.‌ ஆனால்,  போதை‌‌இளைஞர்கள் இவர்களையும் சேர்த்து தாக்கினர்.

மேலும் அந்த இளைஞர்கள்  பெட்ரோல் போடும் இயந்திரங்களை இரும்பு வாளி உள்ளிட்ட கையில் கிடைத்த  பொருட்களை கொண்டு தாக்கி சூறையாடிவிட்டு தப்பியோடினர். விழுப்புரத்தில்  போதை இளைஞர்கள் பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய காட்சிகள் அங்கிருந்த  கண்காணிப்பு கேமராவில் பதிவாகிருந்தது. பின்னர் அந்த வீடியோ  சமூக  வலைதளங்களில் பரவியது. பெட்ரோல் நிலையம் சூறையாடப்பட்ட காட்சிகளை கண்ட  பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: