மக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகள் மனுதாரரின் வீட்டிற்கு சென்று பதிலளிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு

ஆண்டிபட்டி, ஜூன் 25: பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் பதிலளிக்காத அதிகாரிகள், அவர்களின் வீடுகளுக்கே சென்று பதில் மனு அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முரளீதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துறை வாரியான மனுக்கள் விசாரிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் அளித்த மனுவில், பதில் மனு அனுப்பாத துறை அதிகாரிகள் அவர்களது வீட்டிற்கே ரேடியாக சென்று பதில் மனு அனுப்ப வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அளித்த மனு மீது துறை வாரியாக விசாரணை செய்தார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் மானியத்தொகை, பிம்.எம்.கிஷான் தொகை விவசாயிகளுக்கு விரைந்து கிடைத்திட வழிவகை செய்திடவும், அகமலை பகுதியில் கிஷான் கடன் அட்டை குறித்து சிறப்பு முகாம் நடத்திடவும், பெரியகுளம் காளைப்பாடி மாம்பழத்திற்கு நல்ல விளைச்சல் உள்ளதால் ரூபவ் மாமரங்களுக்கு பயிர் காப்பீடு வழங்கிடவும், மலைவாழ் மக்களுக்கு உரிய பட்டா கிடைத்திட வழிவகை செய்திடவும், நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் பிரச்னைகளை தடுத்திடவும், கூடலூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைத்துதர கோரியும், கூடலூர் நெல் விவசாயிகள், சார்பில் நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் பயன்பெறும் சாமி வாய்க்காலை தூர்வாரிடவும், மேலும் அதில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்திடவும் போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குநர் அழகுநாகேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சிந்து (பெரியகுளம்), கௌசல்யா (உத்தமபாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ) தனலட்சுமி மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: