கோடை உழவு செய்வதால் மண் வளம் மேம்படும்

காரைக்குடி, ஜூன் 25: வேளாண்மை உதவி இயக்குநர் அழகுராஜா தெரிவித்துள்ளதாவது: கல்லல் வட்டாரத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்துவருகிறது. இந்த ஈரப்பதத்தை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தை உழவு செய்ய வேண்டும். கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்தி பயிர் நன்கு வளர ஏற்ற சூழ்நிலையை உருவாக்கலாம். மண்ணில் காற்று பரிமாற்றம் அதிகரித்து பயிர் மற்றும் விதைகள் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் எடுத்துக் கொள்ள உதவும். மண்ணில் இறுக்கம் குறைக்கப்பட்டு பயிரின் வேர்கள் நன்கு வளர்ச்சி பெறும்.

கோடை உழவு செய்வதால் மண்ணின் அடியில் உள்ள பயிர்களை தாக்கி அழிக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளியே கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தாலும், பறவைகளாலும் அழிக்கப்படுகிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் போடப்பட்ட இயற்கை எருவில் உள்ள களைவிதைகள் முற்றிலும் அழிக்கப்படுவதுடன் அவைகளும் ஏற்கனவே மண்ணில் உள்ள செயற்கை உரங்களும் மண்ணில் நன்கு கலந்து அவற்றின் சத்துக்கள் பயிர்களுக்கு முழுமையாக கிடைக்க வழி வகுக்கும். நிலத்தினை குறுக்காக உழுவதன் மூலம் மழை நீர் அதிக அளவில் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது. எனவே கல்லல் வட்டார விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்து மண்வளத்தை மேம்படுத்தி, பயிர் சாகுபடியில் அதிக மசூல் செய்யலாம் என்றார்.

Related Stories: