ஊட்டியில் சைனீஸ் காய்கறி விளைச்சல் அதிகரிப்பு

ஊட்டி, ஜூன் 25: ஊட்டியில் சைனீஸ் ரக காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கணிசமான அளவிற்கு விலை கிடைத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் அதிக பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டாலும், சைனீஸ் காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளாக தாம்பட்டி, கொதுமுடி, தூனேரி, கூக்கல்தொரை, கொல்லிமலை ஓரநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சைனீஸ் காய்கறிகளான சுகுணி, ரெட் கேபேஜ், சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, ஐஸ்பர்க், செல்லரி, லீக்ஸ், பார்சிலி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன.

இவ்வகை காய்கறிகள் நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் நூடுல்ஸ், சூப், பர்கர் மற்றும் துரித உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. நீலகிரியில் விளைவிக்க கூடிய சைனீஸ் காய்கறிகளை மார்க்கெட் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்கி, அதனை கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அனுப்புகின்றனர்.

இதுமட்டுமின்றி, சில வடமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் சூழலில் சைனீஸ் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், அவற்றை அறுவடை செய்து விற்பனைக்காக ஊட்டியில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இங்கு ஏலம் விடப்பட்டு தரம் பிரித்து விற்பனைக்காக வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சுகுணி காய், புரூக்கோலி, செல்லரி, லீக்ஸ், பார்சிலி, லெட்யூஸ் போன்றவைகளுக்கு கணிசமான அளவிற்கு விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: