வங்கியில் பணம் எடுத்து செல்வோரிடம் வழிப்பறி: வாலிபர் கைது: ரூ.4.80 லட்சம் மீட்பு

திருச்சி, ஜூன் 25: திருச்சியில் வங்கியில் பணம் எடுத்து செல்வோரை கண்காணித்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து ரூ.4.80 லட்சம் மீட்கப்பட்டது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாநகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் வாகன தணிக்கை செய்து குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன் பேரில் ரங்கம் காவல் நிலைய எல்லையில் தனியார் வங்கியில் இருந்து ரூ.2,50,000 ரொக்கம் எடுத்து வந்த ஒருவரிடம் பணத்தை வழிப்பறி செய்ததாக கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், புலன் விசாரணை செய்தும் திருட்டு நபரை தேடி வந்தனர். இந்நிலையில கடந்த 22ம் தேதி ரங்கம் தனியார் வங்கியில் இருந்து நகையை அடகு வைத்து ரூ.1,50,000 எடுத்து வந்த பெண்ணிடம் வழிப்பறி செய்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் கடந்த 23ம் தேதி ரங்கம் காவல் நிலைய கொள்ளிடக்கரையில் டூவீலரில் சென்ற நபரிடம் கத்தியை காண்பித்து பணம் மற்றும் செல்போன் வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த தடயங்களை வைத்து சாந்தனு(34) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், வழிப்பறி சம்பவங்களிலும், கன்டோன்மென்ட் மற்றும் அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து வழக்கின் சொத்தான ரூ.4,80,000, ஒரு செல்போன் ஆகியவை மீட்கப்பட்டது. இதையடுத்து சாந்தனு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குற்ற வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்த ரங்கம் குற்றப்பிரிவு போலீசாரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினர். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: