ஜெராக்ஸ்மிஷினை பழுதுநீக்கி தராத நிறுவனத்திற்கு ரூ.3லட்சம் அபராதம்: திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர், ஜூன் 25: திருவாரூரில் ஜெராக்ஸ் மிஷின் பழுதினை சரிசெய்து கொடுக்காத நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அருகே சீதக்கமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகானந்தம். இவர் தனது தொழிலுக்காக கடந்த 2019ம் ஆண்டு ஜெராக்ஸ் மிஷின் ஒன்றினை ரூ.46 ஆயிரத்து 500க்கு வாங்கினார். அந்த மிஷினுக்கு 2 வருடங்கள் வாரண்டி இருந்த நிலையில் வாங்கிய 4 மாதங்களிலேயே மெஷின் பழுதாகி உள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் கொடுத்து சரிசெய்து கொடுக்குமாறு தெரிவித்த நிலையில் சரிசெய்யாமலும், புதிய மெஷின் வழங்கப்படாமலும் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முருகானந்தம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதி விசாரணையின்போது முருகானந்தத்திற்கு வருமான இழப்பு ஏற்படுத்தியதற்காக ரூ.60 ஆயிரமும், மன வேதனை, மன உளைச்சலுக்காக ரூ.2 லட்சமும், கூடுதலாக சேவை குறைபாட்டிற்காக ரூ.ஒரு லட்சமும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்தினை சம்மந்தப்பட்ட நிறுவனமும், சர்வீஸ் இன்ஜினீயரான மேற்படி சீதக்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் இருவரும் சேர்ந்து 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டுமென ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: