ஊராட்சி செயலர்களுக்கு சம்பளம் வழங்ககோரி ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 25: ஊராட்சிகளுக்கு உரிய நிதி வழங்கக்கோரி ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மூலம் விடுவிக்கப்படும் மாதாந்திர நிதியினை உடனடியாக வழங்கிட வேண்டும், ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊதிய கணக்கில் நிதி இல்லாததால் கடந்த 5 மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் இருந்துவரும் நிலையில் ஊராட்சி கணக்கு எண் 2 லிருந்து நிதி மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊழியர்களுக்கு முழு அளவில் ஊதியம் வழங்கிட வேண்டும்,

அனைத்து ஊழியர்களுக்கும் மாத இறுதி நாளில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் திருவாரூரில் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வசந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கொரடாச்சேரி,குடவாசல் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து வரும் 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாகவும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

Related Stories: