திருவாரூர் புதிய பேருந்து நிலைய டூ வீலர்கள் ஸ்டாண்டில் இட நெருக்கடி

திருவாரூர், ஜூன் 25: திருவாரூர் புதிய பேரூந்து நிலையத்தில் இயங்கி வரும் வாகன பாதுகாப்பு நிலையம் இடநெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் கூடுதலாக வேறு ஒரு வாகன பாதுகாப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருவாரூரில் கடந்த திமுக ஆட்சியில் 2010ம் ஆண்டில் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட தியாகபெருமாநல்லூர் பகுதியில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பேருந்து நிலையம் அமைப்பதற்காக ரூ.6 கோடி நிதியும் ஒதுக்கப்பட்ட நிலையில் 2011ல் ஆட்சி மாற்றம் காரணமாக பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டு பின்னர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ந்தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி மூலம் காணொலி காட்சிமூலம் திறந்து வைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஆனால் ஏற்கனவே இருந்து வந்த பழைய பேருந்து நிலையத்தை சுற்றியே வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், ரயில் நிலையம் என அனைத்தும் இருந்து வருவதால் பொதுமக்கள் இந்த பேருந்து நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுவதற்கு முன்பு வரையில் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தப் பேருந்து நிலையத்தை சுற்றி இருந்து வந்த வாகன பாதுகாப்பு நிலையம் மற்றும் தங்களுக்கு தெரிந்த அரசு அலுவலகங்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் மன்னார்குடி, தஞ்சை, திருச்சி, கும்பகோணம் போன்ற ஊர்களுக்கு செல்வதற்கு தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துதான் பேருந்துகள் புறப்படுவதால் அங்கு சென்று தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து மூலம் வெளியூர் செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி மூலம் பயன்பாட்டில் இருந்து வரும் ஒரே ஒரு வாகன பாதுகாப்பு நிலையத்தில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்தபடுகிறது. இதனால் இடநெருக்கடி மட்டுமின்றி பெண்கள் மற்றும் வயதானவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை இந்த பாதுகாப்பு நிலையத்தில் உள்ளே சென்று நிறுத்திவிட்டு மீண்டும் அங்கிருந்து வெளியில் எடுப்பது என்பது மிகப் பரிய போராட்டமாக இருந்து வருகிறது.

மேலும் பல்வேறு நேரங்களில் இட நெருக்கடி காரணமாக பெரும்பாலான வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் நிறுத்தும் நிலைதான் இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள், பயணிகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் நலன் கருதி கூடுதலாக ஒரு பாதுகாப்பு நிலையம் புதிய பேருந்து நிலையத்தில் அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் நகராட்சி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண தொகை மட்டுமே வசூல் செய்திட வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: