கரூர், ஜூன் 25: கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக காவல்துறையில் 2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேரடி சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) எழுத்து தேர்வு மாநிலம் முழுதும் 36 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வு கரூர் மாவட்டத்தில் வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 25ம்தேதி (இன்று) பொதுத் தேர்வர்களுக்கு காலை முதன்மை எழுத்து தேர்வும், மதியம் பொதுத் தேர்வர்களுக்கும் மற்றும் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கும் தமிழ்மொழி தகுதித் தேர்வும், நாளை 26ம் தேதி காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வும் என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் தேர்வாளர்கள் பல்வேறு அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.