×

சீருடை பணியாளர் தேர்வாணைய சார்பு ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு

கரூர், ஜூன் 25: கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக காவல்துறையில் 2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேரடி சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) எழுத்து தேர்வு மாநிலம் முழுதும் 36 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வு கரூர் மாவட்டத்தில் வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 25ம்தேதி (இன்று) பொதுத் தேர்வர்களுக்கு காலை முதன்மை எழுத்து தேர்வும், மதியம் பொதுத் தேர்வர்களுக்கும் மற்றும் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கும் தமிழ்மொழி தகுதித் தேர்வும், நாளை 26ம் தேதி காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வும் என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு வரும் தேர்வாளர்கள் பல்வேறு அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

அதன்படி, அழைப்பு கடிதம், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கருப்பு அல்லது நீல நிற பந்து முனை பேனா ஆகியவை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். தேர்வாளர்கள் மையத்திற்கு வரும் போது, செல்போன், ஸ்மார்ட் போன், வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வரக்கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தேர்வு மையத்திற்கு வெளியூரில் இருந்து வரும் தேர்வர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் இரண்டு நாட்களுக்கு காலை 6 மணி முதல் கரூர் நகர பேரூந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். குறிப்பிட்டுக் கூறிய இந்த அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் பட்டினத்தார் குருபூஜை