மங்கலகுறிச்சி -பெருங்குளம் சாலையில் முட்செடிகள் அகற்றப்படுமா?

ஏரல், ஜூன் 25: ஏரலில் இருந்து  மங்கலக்குறிச்சி, பெருங்குளம் வழியாக வைகுண்டம், நெல்லைக்கும்  மற்றும் சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கும் அதிகளவு போக்குவரத்து  நடந்து வருகிறது. மேலும் மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும்  சாலையின் இருபுறமும் வாழை, நெல் விவசாயம் நடந்து வருகிறது.  மங்கலகுறிச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து பண்ணைவிளை, சாயர்புரம் பள்ளி,  கல்லூரிகளில் படித்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகளும் இந்த சாலை  வழியாக சென்று வருகின்றனர். போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த மங்கலகுறிச்சி -பெருங்குளம் சாலையில் அடிக்கடி ஏற்படும்  குடிநீர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுப்பதால் சாலை அரிக்கப்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

சாலையின் அகலமும் குறைவாக இருப்பதால் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடுவது என்பது சிரமமாக உள்ளது. இந்நிலையில் இந்த  சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்செடிகள் ரோடு வரை ஆக்கிரமித்துள்ளது. இதனால்  எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை காணப்படுகிறது. வாகனங்களில் செல்வோரின் ஆடையில் முள்பிடித்து கிழிப்பதுடன் உடலில் குத்தி காயங்களும் ஏற்படுகிறது. எனவே மங்கலகுறிச்சியில்  இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள முட்செடிகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: