×

தாம்பரம் மாநகராட்சியில் முறையான பராமரிப்பின்றி காட்சி பொருளாக மாறிய பொது கழிவறைகள்: பொது மக்கள் தவிப்பு

தாம்பரம், ஜூன் 25: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய பகுதிகளான பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில், போதிய கழிவறை வசதிகள் இல்லை. மேலும்,  ஏற்கனவே இருக்கும் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன.

இதனால், அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில்,  பெரும்பாலான கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால், அவற்றில் உள்ள குழாய் போன்ற   உபகரணங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் சாலை ஓரங்களில், ஆண்கள் ஆங்காங்கே சிறுநீர் கழித்து வருவதால், பொதுமக்கள் கூடும் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. கழிவறைகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், பெண்கள் அதனை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் ஏராளமான பயணிகள் பழுதான நிலையில், பூட்டிக்கிடக்கும் கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநகர  பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பெரும்பாலானோர் தாம்பரம் மேம்பாலத்தில் ஆங்காங்கே சிறுநீர் கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையான துர்நாற்றத்தால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குரோம்பேட்டை, எம்.ஐ.டி மேம்பாலத்தின் கீழே உள்ள கழிவறைகளும் பராமரிப்பின்றி உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

அதேபோல, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வள்ளுவர் குருகுலம் பள்ளிக்கு எதிரே உள்ள கழிவறையில் உள்ள உபகரணங்கள் மற்றும் மின் விளக்குகள் உடைந்த நிலையில் உள்ளதால், அவற்றையும்  பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதில், தாம்பரம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ-டாய்லெட் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் அப்படியே உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு முறையான கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் பொது கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவறைகளில் உள்ள உபகரணங்கள் மற்றும் மின் விளக்குகள் உடைந்த நிலையில் உள்ளது. மேலும், கழிவறைகளை அவ்வப்போது சுத்தம் செய்யாததால் பொதுமக்கள் கழிவறையின் உள்ளே நுழையக்கூட முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு பெரும்பாலான கழிவறைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கழிவறையில் மது அருந்துவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, மேற்கு தாம்பரம், பக்தவச்சலம் தெருவில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே பாதி சாலையை ஆக்கிரமித்து கழிவறை போடப்பட்டுள்ளது.
இந்த கழிவறை பெரும்பாலும் குற்றச் சம்பவங்களுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. இதனை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகிறார். எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவறைகளை முறையாக பராமரித்து பொதுமக்கள் எந்த சிரமமுமின்றி பயன்படுத்த வழி செய்ய வேண்டும்,’’ என்றனர்.

உயர் தரத்தில் அமைக்கப்படும்
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சி பகுதியில் கழிவறைகள் பராமரிப்பு இல்லாமலும், பூட்டியும் இருப்பது உண்மைதான். இதில், தாம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இ-டாய்லெட் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கு அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர்கள் அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. தற்போது மாநகராட்சிக்குட்பட்ட தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில், பராமரிப்பின்றி மற்றும் பூட்டப்பட்டு உள்ள கழிவறைகள் அனைத்தும் முழுமையாக இடிக்கப்பட்டு ஏ.டி.எம், கடை, செல்போன் சார்ஜ் யூனிட், கழிவறைகள் என ஒன்றாக சேர்ந்தபடி பல்வேறு வசதிகளுடன் உயர் தரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் அதேபோல அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Thambaram Corporation ,
× RELATED வீடுகள், கட்டுமான பணியிடங்களில்...