×

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை: விவசாயிகள் புகார்

காஞ்சிபுரம், ஜூன் 25: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சியையொட்டி உள்ள கிராம விவசாயிகள்  அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நல்லுறவு கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்தரய்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும், விவசாயம் சார்ந்த நலத்திட்டங்கள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்த ரஜினி குமாரவடிவேல் பேசுகையில், ‘தனது கிராமத்தில் ஸ்ரீபெரும்புதூர் பாசன கோட்டத்தின் கீழ் உள்ள ஏரி மற்றும் குளங்களில் லட்சக்கணக்கான தாமரை மலர்கள் பூத்துள்ளன. இதனை பொதுப்பணித்துறை முறையாக அகற்றி நீரை விவசாயத்துக்கு பயன்படும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பொதுப்பணி துறையினர் காலதாமதம் செய்து வருகின்றார்.  ஆகவே, உடனடியாக தாமரை கொடிகளை அகற்ற வேண்டும்’ என்றார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு பேசியதாவது: மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் காஞ்சிபுரம் நகராட்சி தொடர்பாக விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என புகார் தெரிவித்தார். பாலாற்றில் தற்போது தண்ணீர் ஓடுவதால் அறிவிக்கப்பட்ட இடத்தில்  தடுப்பணை கட்ட வேண்டும். ஏரிகளை முறையாக தூர்வார வேண்டும். எந்தெந்த ஏரிகள் என்று அறிவிக்க வேண்டும். மீன் வளர்ப்போர் ஏரி தண்ணீரை திறந்துவிட்டுவிட்டு மீன் பிடிக்கின்றனர். இது தவறான அணுகுமுறையாகும்.

விவசாயத்திற்கு மட்டும்தான் முன்னுரிமை அளிக்கவேண்டும். ஏரிநீர் வற்றினால் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். முன்னதாக, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். உடன் வேளாண்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kanchipuram ,
× RELATED கட்டவாக்கத்தில் வாக்களிக்க வர...