மதுராந்தகம் அருகே தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் பணி: உழவர் நலத்துறை செயலர் ஆய்வு

மதுராந்தகம், ஜூன் 25: கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுராந்தகம் அருகே புக்கத்துறை ஊராட்சியில் விவசாயத்திற்கு பயன்படாமல் இருந்த தரிசு நிலத்தை விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதனை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் சமயமூர்த்தி ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை ஊராட்சியில் உள்ள கோடிதண்டலம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 விவசாயிகளுக்கு சொந்தமான 15.4 ஏக்கர் பரப்பளவு தரிசு நிலங்கள் நீர் ஆதாரம் இல்லாமல் விவசாயத்திற்கு பயன்படாமல் இருந்து வந்தது.

இந்த  தரிசு நிலத்தை விவசாயத்திற்கு ஏற்புடைய நிலமாக மாற்றி அமைத்திட வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை ஆகிய துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக வேளாண் பொறியியல் துறை மூலம் 15.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கு நீராதாரம் ஏற்படுத்தும் வகையில் 200 அடி மற்றும் 250 அடி 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 17 விவசாயிகளுக்கு சமமாக நீரானது பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாயம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் சமயமூர்த்தி, கலெக்டர் ராகுல்நாத்  ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதில், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், வேளாண்மை உதவி இயக்குனர் கேசவன், தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலகுமார், தாசில்தார் ராஜேஷ், ஊராட்சி மன்றத்தலைவர் சொரூபராணி எழிலரசன் உள்ளிட்ட குழு மற்றும் விவசாயிகள், கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும், இதேபோன்று அண்ணா மறுமலர்ச்சி கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து கிராம மக்களும் பயன்பெற வேளாண் பொறியியல் துறை ஏற்பாடுகள் செய்து வருகிறது.

Related Stories: