கோவளம் ஊராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்போரூர். ஜூன் 25: சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் செல்லும் வழியில் கோவளம் உள்ளது. இங்கு, அழகிய வளைவான கடற்கரை, பிரபல மாதா கோயில், கைலாசநாதர் கோயில், தர்கா ஆகியவை உள்ளன. இதன் காரணமாக அனைத்து மதமக்களும், சுற்றுலாப் பயணிகளும் தினசரி கோவளத்திற்கு வந்து செல்கின்றனர். கோவளத்திற்கு சென்னை கோயம்பேடு, உயர்நீதிமன்றம், தாம்பரம், அடையாறு, தி.நகர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால், கோவளத்தில் பேருந்து நிலையம் இல்லாததால் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. ஏற்கனவே, கோவளம் பஜார் வீதி, தர்கா தெரு, மாமல்லபுரம் சாலை, கடற்கரை சாலை போன்ற இடங்களில் ஏராளமான கடைகளும், அதிக மக்கள் நடமாட்டமும் இருப்பதால் வாகன நெரிசல் உள்ளது. இந்நிலையில், பேருந்து நிலையம் இல்லாததால் பேருந்துகள் இந்த நான்கு சாலைகளின் ஓரங்களிலும் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எந்த ேபருந்து எந்த இடத்தில் நிற்கிறது என்று கண்டு பிடிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் சாலைகளில் அங்கும், இங்கும் ஓடுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தரிடம் கேட்டபோது, ‘கடந்த 25 ஆண்டுகளாகவே பேருந்து நிலைய ேகாரிக்கையை முன் வைத்து வருகிறோம். தற்போது, திமுக ஆட்சியில் இந்த கோரிக்கை நிறைவேறும் என்று நினைக்கிறோம். கிழக்கு கடற்கரை சாலையையும், கோவளம் சாலையையும் இணைக்கும் இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் வகையில் வருவாய் துறை அரசு புறம்போக்கு இடத்தை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். பேருந்து நிலையம் கேட்டு ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளோம். சுற்றுலா நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கித் தருவதாக அமைச்சரும் உறுதி அளித்துள்ளார். ஆகவே, ெபாதுமக்களின் வேண்டுகோளை கண்டிப்பாக நிறைவேற்றி தருவோம்’ என்றார்.

Related Stories: