சித்தாமூர் நான்கு முனை சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்த சாலை: சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர், ஜூன் 25: சித்தாமூர் நான்கு முனை சாலை சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு எரியாததால், இரவு நேரங்களில் அப்பகுதி இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்ைக எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை  வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்திலிருந்து சூனாம்பேடு செல்லும் வழியில் உள்ள சித்தாமூர் உள்ளது. இங்கு, நான்கு முனை சாலை சந்திப்பு உள்ளது. இந்த கூட்டுச் சாலை வழியாக செய்யூர், சூனாம்பேடு, புதுச்சேரி, மரக்காணம், மதுராந்தகம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.  

இவ்வழியாக, செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இப்பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.  இதனால், இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும், இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்த நான்கு முனை சந்திப்பு சாலையில், கடந்த பல மாதங்களுக்கு முன்பு உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இதில்,  மின் விளக்குகள் சில நாட்களுக்கு முன் பழுதாகி, ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் தற்போது எரிந்து வருகிறது.  

இந்த ஒரு மின் விளக்கில் இருந்து போதிய வெளிச்சம் கிடைக்காததால். அப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் அப்பகுதியை கடந்து செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இருளில் மூழ்கி உள்ள இந்த பகுதியில் பாதசாரிகளும்,  பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, அப்பகுதி மக்கள், பழுதான மின் விளக்குகளை சரி செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும்,  அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு நலன் கருதி பழுதாகி உள்ள இந்த உயர் கோபுர மின் விளக்குகளை சீரமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: