திருவள்ளூர் அருகே அம்மன் கோயில்களை உடைத்து 24 சவரன், ரூ5 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த நெமிலி அகரம் கிராமத்தில் உள்ள 3 அம்மன் கோயில்களின் பூட்டை உடைத்து 24 சவரன் நகை மற்றும் ₹5 லட்சம் உண்டியல் காணிக்கையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நெமிலி அகரம் கிராமத்தில் உள்ள கீழ்விளாகம் தெருவில் ஸ்ரீகடும்பாடி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூசாரியாக இருப்பவர் சேகர். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் 8 மணியளவில் கோயில் பூஜை முடிந்து பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் கோயிலை திறக்க சென்றபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் மற்றும் உண்டியலை உடைத்து  காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்த ₹2 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதேபோல் நெமிலி அகரம் கிராமத்தில் உள்ள செல்லாத்தம்மன் கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகை மற்றும் கிராம மக்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான உண்டியல் காணிக்கையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

மேலும் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலின் பூட்டையும் உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகை மற்றும் உண்டியல் காணிக்கை பணம் ஒன்றரை லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.  இந்த 3 கோயில்களுக்கும் சேகர் என்பவரே பூஜாரியாக இருந்து பூஜை செய்து வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு அந்த பணத்தை திருவிழாக்கள் மற்றும் திருப்பணிகள் நடத்த பயன்படுத்தி வருகின்றனர்.

இதனையறிந்த மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து கோயில் பூஜாரி சேகர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில்  கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து கோயில் பூட்டை உடைத்து  கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தில் உள்ள 3 அம்மன் கோயில்களின் பூட்டை உடைத்து 24 சவரன் நகை மற்றும் ₹5 லட்சம் உண்டியல் காணிக்கை கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: