திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி: திருச்சி சிவா எம்பி பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தா.மோதிலால் ஏற்பாட்டில் திருவள்ளூர் தொகுதி திமுக இளைஞர் அணி நடத்திய திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எம்.பூபதி வரவேற்றார். திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக திமுக எம்பி திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது அவர் ேபசியதாவது, `திமுக இளைஞரணியில் இணைந்தால் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் ஆகலாம். அதற்கு முன்னதாக சில வசதிகளை மறக்க தயாராக வேண்டும். சில தேவைகளை இழக்க வேண்டும். போராட்டம் என்று வந்தால் கட்டாயம் அதில் பங்கேற்று சிறைக்கு செல்ல வேண்டுமானாலும் தயங்காமல் செல்ல வேண்டும். எவ்வளவு நாட்கள் சிறை வாசம் என்பதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

திமுக என்பது கொள்கை சார்ந்த கட்சி. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொதுமக்களின் பிரச்னைக்காக தொடர்ந்து போராடும்.

கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுக தான். முதல் முறை பட்டதாரிகளாக இப்போது தான் பலர் ஆகியிருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுக தான். அண்ணா, கலைஞர் ஆகியோர் இளைஞரணி நிர்வாகிகளுக்கு சொன்னதை கேட்டதால் தான் எம்பிக்களாகவும், எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் ஆகியுள்ளனர்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஜெரால்டு, கே.திராவிட பக்தன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், பா.சிட்டி பாபு,, கிளாம்பாக்கம் எம்.பன்னீர் செல்வம், சரஸ்வதி சந்திரசேகர், சிவங்கரி உதயகுமார், நகர, ஒன்றிய செயலாளர்கள் சி.சு.ரவிச்சந்திரன், கூளூர் எம்.ராஜேந்திரன், கிறிஸ்டி, ச.மகாலிங்கம், மோ.ரமேஷ், ஆர்.ஜெயசீலன், கே.ஹரிகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் வி.சி.ஆர்.குமரன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.பாபு மற்றும் இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: