ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் டயர், உதிரி பாகங்கள் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவும், மாவட்ட முதன்மை நீதிமன்றமாகவும் செயல்பட்டு வந்த கட்டிட வளாகத்தில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதால் போதிய பாதுகாப்பின்றி சமூக விரோதிகள் அதனை திருடிச் செல்வதால்  நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் 1997ம் ஆண்டு உதயமானது. அப்போது ஆட்சியர் அலுவலக கட்டிடம் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டு அங்கு செயல்பட தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து நிர்வாக வசதிக்காக சென்னை திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. இதனால் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் செயல்பட தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளை விசாரிக்க திருவள்ளூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்டநீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள், காவல்துறையினர், வழக்கு தொடர்பவர்கள் நீதிமன்றத்தை  தேடி  அலையும் நிலை இருந்ததால் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் வேண்டுமென்ற வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டது.

இதனால் இங்கு செயல்பட்டுவந்த மாவட்ட முதன்மை நீதிமன்றம் அங்கு மாற்றப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவும், மாவட்ட முதன்மை நீதிமன்றமாகவும் செயல்பட்டு வந்த அலுவலக கட்டிடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. திருவள்ளூரில் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு காவல் துறை அலுவலகம்  வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகளவில் நடப்பதால் அதனை தடுக்கும் பொருட்டு கடத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனத்தின் உரிமையாளர்கள் வழக்கு காரணமாக அதை மீட்பதில்லை.

அதனால் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அந்த அலுவலகம் செயல்பட்டு வருவதால் அந்தப் பகுதியில் ஒரு சில வாகனங்களை மட்டும் நிறுத்தி வைத்துள்ளனர்.

100-க்கும் மேற்பட்ட வேன்,  கார், ஷேர் ஆட்டோ,  போன்ற வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவும் மாவட்ட முதன்மை நீதிமன்றமாகவும்  செயல்பட்டு வந்த அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் போதிய பாதுகாப்பின்றி பாழடைந்த கட்டிடத்தை சுற்றி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதால் அந்த வாகனங்களில் இருந்து டயர், ஸ்டெப்னி, மற்றும் வாகனத்தின் உதிரி பாகங்களை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். இதனால் வாகனங்களும் எலும்புக் கூடாக காட்சியளிக்கிறது.  

அதனால் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு காவல் துறை சார்பில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பதால் இது போன்ற நிலை உருவாகியுள்ளது.  மேலும் இரவு நேரங்களில் பழைய ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லவும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.  

எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகமாகவும், மாவட்ட முதன்மை நீதிமன்றமாகவும் செயல்பட்டு வந்த கட்டிடத்தை பராமரிப்பதோடு,  அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை முறையாக அப்புறப்படுத்திடவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திடவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: