×

வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோரப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் சார்பில் வாகனங்கள் நிறுத்துவதற்காக 80 இடங்களில் சுமார் 12,000 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த வாகன நிறுத்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹20 எனவும், இரண்டு சக்கர வாகனங்களுக்கு ₹5  எனவும் கட்டடணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  வாகனம் நிறுத்தும் இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி அதற்கான கட்டணத்தை செலுத்தினால் கட்டணம் வசூலிப்பாளரின் மூலம் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இந்தக் குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பினை பயன்படுத்தி ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை மாநகராட்சியின் சார்பில் வாகன நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 80 இடங்கள் குறித்த தகவல்களை https://chennaicorporation.gov.in/gcc/pdf/ECS.pdf என்ற இணைப்பின் வாயிலாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.    

வாகன நிறுத்தங்களில் ஒரு சில இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு அதற்கான கட்டணத்தை ஒரு சில உரிமையாளர்கள் செலுத்தாமல் விதிமுறைகளை மீறி சென்று விடுகின்றனர்.  இதுபோன்ற செயல்களை தடுக்க சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக  சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை  காவல்துறையுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம்  சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில்  ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி வாகன நிறுத்தங்களில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மற்றும் கட்டணம் செலுத்தாத நபர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சி வாகன நிறுத்தங்களை முறையாக பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும்,   சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாகன நிறுத்தங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற மாநகராட்சியின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Tags :
× RELATED காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்: எல்ஐசி அறிவிப்பு