ராஜிவ்காந்தி சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை: போக்குவரத்து பாதிப்பு

துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ்காந்தி சாலை அடையாறு மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இந்த சாலையில் ஐ.டி நிறுவனங்கள், தனியார் கல்லூரிகள், பள்ளிகள்,  பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்குகள் அதிகளவில் உள்ளதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்கள் செல்ல சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து இங்குள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் தங்களது விளம்பர பலலை மற்றும் பொருட்களை வைத்துள்ளனர். இங்குள்ள பெரும்பாலான கடைகளுக்கு பார்க்கிங் வசதி இல்லாததால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சர்வீஸ் சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

பல இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பாதை குறுகி, அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பாதசாரிகள் சர்வீஸ் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. அவ்வாறு செல்லும்போது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, துரைப்பாக்கம் சிக்னல் முதல் கந்தன்சாவடி பஸ் நிறுத்தம் வரை சர்வீஸ் சாலை மற்றும் நடைபாதை முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளதால், தினமும் விபத்துகள் நடக்கிறது. இதுகுறித்து, துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுபற்றி நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: