சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கும் அதிகாரிகள் மீது தொடர் தாக்குதல்: மாடுகளின் உரிமையாளர்கள் அடாவடி; உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை வளர்ப்போர் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், மீறி சாலைகளில் திரிய விட்டால் அவை சிறைபிடிக்கப்படுவதுடன், அதை  வளர்ப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், அரும்பாக்கம், அமைந்தகரை, டி.பி. சத்திரம், திருமங்கலம், முகப்பேர், நொளம்பூர், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரிவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே இதை தடுக்கும் வகையில், மண்டல சுகாதார ஆய்வாளர் தலைமையில் ஊழியர்கள் அவ்வப்போது மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

அவ்வாறு மாடுகளை பிடிக்கும் அதிகாரிகளுடன் மாடுகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுபட்டு கொலை மிரட்டல் விடுவதுடன், தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கால்நடை வாகனத்தில் ஏற்றப்பட்ட மாடுகளை, வலுக்கட்டாயமாக கீழே இறக்கி கொண்டு செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக, சுகாதார ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட மாடுகளின் உரிமையாளர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், வில்லிவாக்கம் பகுதியில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிக்க சென்ற சுகாதார ஆய்வாளர் பாலகுருவை, மாடுகளின் உரிமையாளர்கள் சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த மாடுகளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் பாலகுரு வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த மண்டலத்தில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. சென்னை முழுவதும் இந்த பிரச்னை நிலவுகிறது. தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது போலீசில் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘போக்குவரத்துக்கு இடையூறாக, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித்தெரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதன்படி மாடுகளை பிடிக்க செல்லும்போது, மாடுகளின் உரிமையாளர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவ்வப்போது, அதிகாரிகள், ஊழியர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில்  திரியும் மாடுகளை பிடிக்க செல்லும் மாநகராட்சி அதிகாரிகளை தாக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்,  அதிகாரிகளுக்கு  உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: