குற்றம் சாட்டப்பட்டவர், சந்தேக நபரை அடிக்கவோ, சித்ரவதையோ செய்ய கூடாது: போலீசாருக்கு அதிரடி உத்தரவு

சென்னை: குற்றம் சாட்டப்பட்டவர், சந்தேக நபரை அடிக்கவோ, சித்ரவதை செய்யவோ கூடாது என்று காவல் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கு காவல்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: குற்றம் சாட்டப்பட்டவர்களை, சந்தேக நபரை அடிக்கவோ அல்லது சித்ரவதை செய்யவோ கூடாது என்று அனைத்து காவல் துறை அதிகாரிகளும் காவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக தனிப்படையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் நிலையத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். குடியிருப்புகள், லாட்ஜ்கள் போன்றவற்றில் வைக்கக் கூடாது. குற்றவாளியிடம் வாக்குமூலம் பெறும் போது வன்முறையை கையாள்வது கூடாது.

கேள்விகள், கைரேகைகள் மற்றும் சிடிஆர்எஸ் மூலம் விஞ்ஞான விசாரணை நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். குற்றவாளிகள் போலீஸ் காவலில் இருக்கும் காலம் முழுவதும் தனிப்பிரிவு காவலர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் இருக்க வேண்டும். காவலில் உள்ள நபர்களுக்கான உணவு, மருந்துகளையும் அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். கைது செய்யப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவரிடம் உடல்நிலை, மருந்து நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும். காவலில் வைக்கப்படுவதற்கு முன் மருத்துவப் பரிசோதனை தேவையான வசதிகள் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முழுமையாக செய்யப்பட வேண்டும். உண்மையான சோதனையின்றி உடற்தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மது, போதைப் பொருள் போன்ற வற்றுக்கு அடிமையான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படக் கூடாது. ஏனெனில் அவர்கள் போதைப் பொருள் கிடைக்காத காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டு இறந்து விடுவார்கள். காவல்நிலையம், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றில் சிசிடிவி பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல், போலீஸ் சித்ரவதை பற்றிய தவறான குற்றசாட்டை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். சீலிங் பேன், ஹார்பிக், ஆசிட் போன்ற கழிவறையில் உள்ள துப்புரவுக் பொருட்கள், கூர்மையான பொருள்கள் போன்ற தற்கொலைக்கு உதவும் சூழல்களில் இருந்து லாக் அப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.  

தேவையான அடிப்படை ஆடைகள் வழங்கப்பட வேண்டும். லுங்கி, வேஷ்டியை தவிர்க்கலாம். குற்றச்சாட்டப்பட்டவரை இருசக்கரவாகனத்தில் அழைத்து செல்லக்கூடாது. குற்றம் சாட்டப்பட்ட பெண்களை மாலை முதல் விடியற்காலை வரை கைது செய்யக்கூடாது. பெண்களை இரவு காவலில் வைக்கக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்பு கடுமையாக நடந்து கொள்ள கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்காக காவல் நிலையத்திற்கு குடும்ப உறுப்பினர்களை கொண்டு வரக்கூடாது. போக்குவரத்து காவல்துறை வாகனத்தை அல்லது செல்போனை பறிமுதல் செய்யக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: