நடராஜர் கோயிலுக்கு சொந்தமான குளம், நிலங்களை மீட்க வேண்டும்

காட்டுமன்னார்கோவில், ஜூன் 14:  காட்டுமன்னார்கோவில் அடுத்த கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் அமைந்துள்ள சிவலோகநாதர் கோயில் சுமார் 600 வருடங்களுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோயிலிலுக்கு சொந்தமான பல சொத்துக்கள் தற்போது ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றன. இதேபோல இந்த கிராமத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிலங்கள், குளம் ஆகியவைகளும் தற்போது தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. நடராஜர் கோயிலுக்கு சொந்தமான சேதுராமன் குளத்தை தனியார் மீன் வளர்ப்பு நபரிடம் இருந்து மீட்க வேண்டி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக அறநிலையத்துறை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சேதுராமன் குளத்தினை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டனர். ஆனால் தற்போது வரை குளம் ஆக்கிரமிப்பிலேயே இருந்து வருகின்றது. இதனால் சிதம்பரம் கோட்டாட்சியர், கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை புகார் செய்துள்ளனர். முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து காட்டுமன்னார்கோவில் வருவாய் வட்டாட்சியருக்கு ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டும் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தாமல் பொதுமக்களின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றார். குறிப்பாக தற்போது நடராஜன் கோயில் பெயரில் இருந்த குளத்தை முறைகேடாக, வருவாய்த்துறையினர் கணக்கை மாற்றி எழுதி முறைகேடு குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், வருவாய்துறை சம்பந்தப்பட்டுள்ளதால் இதனை விசாரிக்க தனி குழு ஒன்றை அமைத்து முறையாக விசாரணை செய்து கோயில் குளத்தை பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் அறநிலையத்துறைக்கும். தமிழக முதல்வருக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: