ஆவத்திபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி கேட்டு பெற்றோர்கள் தர்ணா

பள்ளிபாளையம், ஜூன் 14: ஆங்கில வழி கல்வியை 9ம் வகுப்பிற்கு நீடிக்கக் கோரி, பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 8ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி நடைபெற்று வருகிறது. நேற்று பள்ளி திறக்கப்பட்டதும், 8ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்தனர். 8ம் வகுப்பு முடித்த தங்களுக்கு மேற்கொண்டு ஆங்கில வழியில் பயில 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புவரை ஆங்கில வழி வகுப்புகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, பள்ளி வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பள்ளியில் தற்போது வகுப்பறைகள் இல்லாததால் ஆங்கில வழி வகுப்புக்கு வழியில்லை. பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு ஆங்கில வழியில் நடப்பதால், அங்கு சேர்க்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் கலைந்து சென்றனர்.

Related Stories: