மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று திறக்கப்பட்டதையடுத்து, மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து, கடந்த மே மாதம் 13ம் தேதி கோடை விடுமுறை விடப்பட்டது. 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, மே மாதம் 31ம் தேதி வரை பொது தேர்வுகள் நடந்தன. இந்நிலையில் ஜூன் 13ம் தேதி முதல், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 1713 அரசுப்பள்ளிகள், 18 அரசு உதவிபெறும் பள்ளிகள், 8 பகுதி நிதிபெறும் பள்ளிகள், 46 சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 3 ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், மற்றும், 267 மெட்ரிக் பள்ளிகள் உள்பட மாவட்டத்திலுள்ள, 2,055 பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்பு, பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். இதேபோல், பிளஸ்2 மாணவர்களுக்கு வரும் 20ம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. கொரோனா தொற்று காரணமாக இரு ஆண்டுகளுக்கு பின், தற்போது கொரோனா தாக்கம் குறைந்ததால், ஜூன் மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனால் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஊத்தங்கரை: கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மலர் தூவி, இனிப்பு வழங்கி வரவேற்றனர். பின்னர் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பர்குணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், பொருளாளர் ஆறுமுகம், துணை தலைவர் காந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை மற்றும் விலையில்லா பாட புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பி.டி.ஏ., தலைவர் கண்ணாமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிர்மலா தேவி, செயலாளர் ஜெயராமன், வட்டார கல்வி அலுவலர்கள் மாதம்மாள், லோகேஷ், பள்ளி தலைமையாசிரியர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை:அஞ்செட்டி மலை பகுதி கிராமங்களில் உள்ள சித்தாண்டபுரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி, பிலிகுண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கங்கதேவனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சொப்புகுட்டை ஆகிய பள்ளிகளில், ஓசூர் வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், முதல் நாளான நேற்று, புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், நோட்டு புத்தகம், சிலேட்டு, எழுதுபொருட்கள், இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்சியில் சித்தாண்டபுரம் தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், பலிகுண்டுலு தலைமை ஆசிரியர் ஜெயந்தி, கங்கதேவனப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, சொப்புகுட்டை தலைமை ஆசிரியர் ஹென்றி விமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஓசூர் வித்யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related Stories: