திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

திருவாரூர், ஜூன் 14: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சகட்டத்தில் இருந்தது. அதன் பின்னர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் பணி காரணமாகவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாகவும் இந்த தாக்கம் என்பது பெருமளவில் குறைக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் பின்னர் கொரோனாவின் தாக்கம் முற்றிலுமாக குறைந்ததையடுத்து முழு அளவில் பள்ளிகள் இயங்கின. இதனையடுத்து வழக்கம்போல் பொது தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் மீண்டும் பள்ளிகள் நேற்று (ஜூன் 13ம்தேதி) முதல் 1 முதல் 10 வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதையடுத்து கடந்த ஒருவார காலமாக பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தொட்டிகள், சமையல் கூடம் உள்ளிட்ட அனைத்தையும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 945, அரசு உதவி பெறும் பள்ளிகள் 125, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 134, சிபிஎஸ்இ பள்ளிகள் 6 மற்றும் நர்சரி பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என மொத்தம் ஆயிரத்து 282 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் இந்த பள்ளிகள் அனைத்திலும் நேற்று மாணவர்கள் முழு உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். இதனையடுத்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு அரசு அறிவித்தவாறு கற்றல், கற்பித்தலுக்கு தயாராகும் வகையில் நல்லொழுக்கம் மற்றும் நீதிபோதனை கதைகள் ஆசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டது.

Related Stories: